கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

திங்கள், 21 மார்ச், 2011

தஸ்பீஹ் மணி

பிற மதத்தவர்கள் வைத்திருக்கும் ஜெபமாலையிலிருந்து காப்பியடிக்கப்பட்டதே தஸ்பீஹ் மணி.அல்லாஹ்வின் தூதரும், அவர்களின் அன்புத் தோழர்களும் இந்த ஜெபமாலையை வைத்துக் கொண்டிருக்கவில்லை.'யார் பிற சமயக் கலாச்சாரத்திற்கேற்ப நடக்கின்றாரோ அவர் அவர்களைச் சேர்ந்தவரே' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)நூல்கள் : அபூதாவூத் 3512, அஹ்மத் 4868

எனவே பிற சமயத்தவரிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட இந்த தஸ்பீஹ் மணி தவிர்க்கப்பட வேண்டியதாகும்.'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் தஸ்பீஹ் எண்ணுவதை நான் பார்த்திருக்கிறேன்'அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)நூல்கள் : திர்மிதீ 3332, 3408, நஸயி 1331,'உங்கள் விரல்களால் எண்ணுங்கள்! அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்படும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : புஸ்ரா (ரலி)நூல்கள் : திர்மிதீ 3507, அபூதாவூத் 1283


தஸ்பீஹ் மணியை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் வருமாறு:'நானும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு பெண்ணிடம் சென்றோம். அவருக்கு முன்னால் சிறு கற்களோ, பேரீச்சங் கொட்டைகளோ இருந்தன. அவற்றைக் கொண்டு அப்பெண் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தார்'அறிவிப்பவர் : ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி)நூல்கள் : திர்மிதீ 3491, அபூதாவூத் 1282இந்த ஹதீஸின் அடிப்படையில் தஸ்பீஹ் மணி வைத்துக் கொள்ளலாம் என்கின்றனர்.ஆனால் இந்த ஹதீஸ் நம்பகமானது அல்ல. ஏனெனில் இதன் மூன்றாவது அறிவிப்பாளர் குஸைமா என்பவர் யாரென்று அறியப்படாதவர். இதனை தஹபீ அவர்கள் மீஸானிலும், இப்னு ஹஜர் அவர்கள் தக்ரீபிலும், குறிப்பிடுகிறார்கள்.

மேலும் இதன் நான்காவது அறிவிப்பாளர் ஸயீத் பின் அபீ ஹிலால் என்பவர் நம்பகமானவராக இருந்தவர். எனினும் கடைசிக் காலத்தில் நினைவுத் தடுமாற்றம் கொண்டவராகி விட்டார் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் கூறுகின்றார். எனவே இந்த ஹதீஸ் ஏற்கப்பட முடியாததாகும்.

தஸ்பீஹ் மணியை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் மற்றொரு ஆதாரம்:'நான் தஸ்பீஹ் செய்வதற்கு நான்காயிரம் பேரீச்சம் பழக் கொட்டைகளைக் குவித்து வைத்திருந்த போது என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது அவர்கள் 'நீ செய்து கொண்டிருக்கும் தஸ்பீஹை விடச் சிறந்ததை நான் உனக்குக் கூறட்டுமா?' கேட்டார்கள். 'எனக்குக் கூறுங்கள்' நான் கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஸுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று கூறு!' என்றார்கள்.அறிவிப்பவர் : சஃபிய்யா (ரலி)நூல் : திர்மிதீ 3477

இந்த ஹதீஸும் நம்பகமானது அல்ல. ஏனெனில் இதன் மூன்றாவது அறிவிப்பாளராகிய ஹாஷிம் பின் ஸஃது என்பவர் நம்பகமானவர் அல்ல என்று தஹபீ அவர்கள் மீஸானி'லும், இப்னு ஹஜர் அவர்கள் தக்ரீபிலும் கூறுகின்றனர்.மேலும் இதன் இரண்டாம் அறிவிப்பாளர் கினானா' என்பவர் யாரென்றே தெரியாதவர்.மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த மார்க்கத்தில் எப்போது பார்த்தாலும் தஸ்பீஹ் செய்து கொண்டிருக்க வேண்டும் எனக் கூறப்படவில்லை. ஒரு முஸ்லிமுக்கு ஏராளமான கடமைகள் உள்ளன.

மனைவி, மக்களைக் காக்கும் கடமை, பிரச்சாரம் செய்யும் கடமை போன்ற கடமைகளைச் செய்ய வேண்டியவன் பல்லாயிரக் கணக்கில் தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தால் அந்தக் கடமைகளையெல்லாம் அவனால் செய்ய முடியாமல் போகும்.நபிகள் நாயகம் அவர்கள் கற்றுத் தந்த திக்ருகளில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் கூறப்படும் அதிக பட்ச எண்ணிக்கை 100 க்கு மேல் இல்லை. இதை எண்ணுவதற்கு கைவிரல்களே போதுமானதாகும்.

தஸ்பீஹ் மணி ஏற்படுத்திய விளைவுகளையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். தாம் எப்போதும் அல்லாஹ்வின் நினைவில் நிலைத்திருப்பதாக தம்பட்டம் அடிக்கும் போக்கை இது ஏற்படுத்தி விட்டது.தஸ்பீஹ் மணியைக் கையால் உருட்டிக் கொண்டு மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருப்பவர்களையும் கூட நாம் காண முடிகின்றது.இன்னும் சிலர் தஸ்பீஹ் மணியை உருட்டும் போது யாரேனும் ஸலாம் கூறினால் அதற்குக் கூட அவர்கள் பதில் சொல்வதில்லை. ஒரு தலை அசைப்புத் தான் ஸலாமுக்குப் பதிலாகக் கிடைக்கும். ஸலாமுக்குப் பதில் கூறுவது கடமை என்பதைக் கூட இவர்களால் உணர முடியவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இல்லாத இந்த நவீன கண்டு பிடிப்பு அல்லது காப்பியடிப்பு புனிதம் நிறைந்த பொருளாகக் கூட மாறி விட்டது.
நபிகள் நாயகம் அவர்களின் காலத்தில் இது இல்லாததாலும் அது ஏற்படுத்தும் தீய விளைவின் காரணமாகவும், பிறரிடமிருந்து அது காப்பியடிக்கப்பட்டது என்பதாலும் இந்த ஜெபமாலை தவிர்க்கப்பட வேண்டும். இஸ்லாத்திற்கும், இதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
- thanks - www.onlinepj.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக