கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

திங்கள், 18 ஜூன், 2012

மரணத்திற்கு பின்னும் நன்மைகள்!


பிரபஞ்சத்தின் படைப்பாளானாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:  
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவரே! பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். ( அல்குர்ஆன்: 29:57)
 மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் ஒரு நாள் மரணித்தே தீர வேண்டும். மரணத்திலிருந்து தப்பித்தவர்கள் யாருமில்லை. இன்று மற்றவர்கள் மரணித்தால் நாளையோ அல்லது நாளை மறுநாளோ நாம் மரணிக்கப் போகிறோம்...
.
அந்த மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை உண்டு என்று நம்மையெல்லாம் படைத்த இறைவன் இயம்புகின்றான். அதனால் தான் மரணித்தப் பின் நீங்கள் அனைவரும் என்னிடமே கொண்டு வரப்படுவீர்கள் என்று தன்னுடைய திருமறையின் மூலமாக கூறுகின்றான்அதுமட்டுமின்றி இவ்வுலக வாழ்வையும் மரணத்தையும் இவ்வாறு கூறுகின்றான்:உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன். மன்னிப்பவன். (அல்குர்ஆன் 67 : 2) நன்மை செய்த நிலையில் தமது முகத்தை அல்லாஹ்வை நோக்கி திருப்புபவர் பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். காரியங்களின் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது.    (அல்குர்ஆன் 31 : 22)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று செயல்களை தவிர அனைத்தும் முடிவடைந்து விடும். 1.நிலையான தர்மம் 2.பயனுள்ள கல்வி  3.இறைவனிடம் பிரார்த்திக்கும் குழந்தைகள். (அபூஹூரைரா(ரலி) முஸ்லிம்)
ஒரு இலக்கை நோக்கி மனித இனம் பயணித்துக் கொண்டிருக்கிறது. மனித இனம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் அந்த இலக்கை அது அடைந்தே தீரும். அவ்விலக்கை சில லட்சியங்களுடன் வாழ்ந்து சென்றடைந்தால் மனித இனம் மாண்பு பெறும். அந்த லட்சியங்களையும் தன்னைப் படைத்த இறைவனும் அவனின் திருத்தூதரும் காட்டிய வழியில் அமைத்துக் கொள்ளுமேயானால் நிலையான பலா பலன்களை மனித இனம் தனது இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்ளும். இல்லையெனில் தலைக்குனிவே! அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
இறைவனோடு மனித இனத்துக்குள்ள பந்தம் சில தினங்களுக்கு மட்டுமல்ல. குறிப்பிட்ட நேரத்தோடு முடிவடைந்து விடுவதுமல்ல. பிறக்கும் பாக்கியம் பெற்றதிலிருந்து மரணத்தின் வழியாக மறுமை வாழ்க்கை வரை மகத்தான இரட்சகனின் நிர்ணய ஏற்பாட்டில் மனிதன் பிரிக்க முடியாத அம்சமாக இருக்கிறான்

பிறவிப் பயனை அவன் அடைய வேண்டுமேயானால் மரணத்திற்கு பின்னுள்ள வாழ்க்கைப் பற்றிய கவலையும் அக்கறையும் மனிதர்களின் எண்ணங்களில் நீங்காத நீருற்றாக ஊற்றெடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ்வும் அவனது ரசூலும் எடுத்துக் காட்டும் நன்மைகளை செயல்படுத்துவதன் மூலம் அந்த நீருற்று அல்லாஹ்வின் பேரருளால் வற்றாத ஜீவநதியாய் பொங்கி பிரவகிக்கும்.
இந்த நதியின் விளைச்சலும் அதன் அறுவடையும் ஏக நாயன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தால் கிடைப்பதாகும்.அதைத்தான் அல்லாஹ் தனது திருமறையில் 67 : 2 ல் உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்று சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் படைத்ததாகக்
கூறுகிறான்.

அந்த அழகிய செயல்கள் எத்தகையதாய் இருத்தல் நலம் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்களும் நிலையான தர்மம், பயனுள்ள கல்வி இறைவனிடம் பிரார்த்திக்கும் குழந்தைகள் என்று கூறுகின்றார்கள்.இக்காரியங்களை வேண்டாவெறுப்பாக இன்றி அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்தோடு செயல்படுத்த வேண்டியவைகளாகும். அப்போதுதான் அல்லாஹ்விடமிருந்து நன்மைகள் நம் மரணத்திற்கு பின்னும் பாதுகாப்பாக நமக்கு கிடைக்கும். அதல்லாமல் நயவஞ்சகர்களைப் போன்று தடுமாற்றத்துடன் நடப்போமேயானால் அந்த காரியங்கள் எப்படி பரிதவிக்கும் என்பதை அல்லாஹ் தன் திருமறையில்... 
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மறுத்ததும் சோம்பலாகவே தொழுது வந்ததும் விருப்பமில்லாமல் (நல்வழியில்) செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டதை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்குத் தடையாக இருக்கிறது.(அல்குர்ஆன் (9:54) 
என்று கூறுகின்றான் இதுபோன்று நம் காரியங்கள் ஆகி விடாமல் அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்
நிலையான தர்மம்:
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் விவசாயம் செய்கிறார். அல்லது செடிகளை நடுகிறார். அதிலிருந்து பறவைகள், மனிதர்கள், கால்நடைகள் சாப்பிட்டால் அது அந்த மனிதருடைய கணக்கில் தர்மமாக கொள்ளப்படும் (அனஸ்(ரலி)முஸ்லிம்நிலையான தர்மத்தில் பள்ளிவாசல்கள் கட்டுவது, அனாதைகளை பராமரிப்பது அல்லது அனாதை இல்லங்களுக்கு உதவி செய்வது, முதியோர், ஆதரவற்றவர்களுக்கு உதவிகள் செய்தல் ஆதரித்தல் போன்ற செயல்களை செய்வதால் இதன் பலன்கள் நாம் இறந்த பின்னும் நமக்கு வந்துக் கொண்டே  இருக்கும்பண்டைய காலங்களில் நம் சமுதாய முன்னோர்கள் சத்திரங்கள் கட்டுதல். கிணறுகள் வெட்டி விடுதல் போன்ற நன்மையான செயல்களை செய்தனர். ஆனால் இன்றைய காலத்தில் அப்படியெல்லாம் யாரும் செய்வதில்லை இருப்பினும் நாம் அதில் அக்கறை கொள்ள வேண்டும்
பயனுள்ள கல்வி:
பயனுள்ள கல்வி என்பது வெறுமனே உலக ஆதாயங்களை மட்டும் நோக்கமாகக் கொண்டதாக இல்லாமல மறுமை என்ற உயர்வான நிலையான நன்மைகளை மனிதர்களுக்கு ஏற்படுத்தித் தருவாக இருத்தல் வேண்டும். பாக்கியம் பொருந்திய அந்த நன்மைகளுக்கு வழிவகுத்து தராத எந்த கல்வியும் வேறு எந்த மாதிரியான லாபங்களைத் தந்தாலும் மனிதர்கள் முழுமையான பலன்களை பெற்று விடுவதில்லை.
அல்லாஹ் கூறுகிறான்:
உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் கல்வி கொடுக்கப்பட்டவர்களுக்கும் பல படித்தரங்களை அல்லாஹ் உயர்த்துகின்றான். அல்லாஹ் நீங்கள் சொல்பவற்றை நன்கு அறிபவனாக இருக்கிறான்.   (அல்குர்ஆன்: 58:11)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். (அறிவிப்பவர்: முஆவியா (ரலி) புகாரி 71)
மார்க்கக் கல்வி என்பது எல்லா நன்மைகளுக்கும் ஊற்றாக விளங்குவது வெளிப்படை. எவர் மார்க்கக கல்வியை கற்கிறாரோ அவர் அதன் மூலம் தன்னைச் சீர்திருத்திக் கொண்டு நன்மை அடைவதுடன் பிற மக்களின் வாழ்க்கையையும் சீர்திருத்த முயல்வார்.இதன் மூலம் படைத்த இறைவன் விரும்பும் நன்மாற்றங்கள் நிலையான நற்பயன்கள் மனித சமுகத்தினுள் ஏற்பட வழி வகுக்கிறார்.
அல்லாஹ் கூறுகிறான்:
நன்மையை ஏவி, தீமையை தடுத்து மக்களை நல்வழிப்படுத்தும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.(அல்குர்ஆன்: 3:104) 
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்!
யார் கல்வியை நாடி அப்பாதையில் செல்கிறாரோ அவருக்கு சுவர்க்கத்தின் பாதையை அல்லாஹ் இலகுவாக்கி விடுகிறான். (முஆவியா(ரலி) புகாரி, முஸ்லிம்)
இன்னும் அல்லாஹ் கூறுகிறான்.தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவோம்               (அல்குர்ஆன்: 4:114) 
அலி(ரலி) அவர்களை பார்த்து நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அலீயே! அல்லாஹ்வின் மீதாணையாக! உன் மூலமாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழி கிடைப்பது சிகப்பு ஒட்டகங்கள் உனக்கு கிடைப்பதை விட சிறந்ததாகும்.    (ஸஹ்ல் பின் ஸஅத்(ரலி) புகாரி 2942) 
எனவே பயனுள்ள கல்வி என்பது மார்க்கக் கல்வியும் அது ஆர்வமூட்டும்  அழைப்புப்பணியையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவர் கற்ற கல்வியை மற்றவருக்கு கற்றுக் கொடுத்தாலோ அல்லது ஒருவரை நேர்வழியில் கொண்டு வர முயற்சி செய்தோலோ அல்லது கொண்டு வந்தாலோ அதன் நன்மை மரணத்திற்கு பின்னும் அளவிட முடியாததாகும்

ஸாலிஹான குழந்தை:
அல்லாஹ் கூறுகிறான்:
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக!(என்று கேட்டார்) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண்குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம் (அல்குர்ஆன்: 37-100-101)படைத்த இறைவன் மனிதர்களுக்கு வழங்கும் செல்வங்களில் பிள்ளைச்செல்வமும் அழகான ஒன்றாகும். தன் பேர்சொல்ல ஒர் பிள்ளை வேண்டும் என்று விரும்பும் மனிதர்கள்; மார்க்கம் கூறும் நற்பண்புகள் நிறைந்த பிள்ளையாக பெற்றுக் கொள்வார்களேயானால் அவ்வாரிசு அவர்களின் மரணத்திற்கு பின்னும் அவர்களுக்கு நன்மைகளைப் பெற்று தருபவர்களாக இருப்பார்கள்.

தங்களின் அடையாளமாக, தங்கள் பாரம்பரியத்தின் சின்னமாக, தங்களை பராமரிக்கும் நல்லுதவியாக, விளங்கும் தங்கள் பிள்ளைகளை தாத்தாரியாகவோ தறுதலையாகவோ வளர்த்து விடுவோமேயானால் அப்பிள்ளை தங்களுக்கும் பூமிக்கும் வேண்டாத சுமையதாக ஆகி விடுவதை நாம் பார்க்கலாம்.  மேலும் உலகக்கல்வியை மட்டும் கற்றுக் கொடுத்து விட்டு சிறுவயதுமுதலே வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் ஹாஸ்டல்களில் தங்க வைத்தோ அல்லது உள்ளுரிலேயே அதிகாலை முதல் நடு இரவு வரை உலகப் படிப்புக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து அதனிடையில் மார்க்கக் கல்விக்கு கொஞ்சம்கூட நேரம் ஒதுக்காமல் வளர்க்கப்படும்; பிள்ளைகளில் பெரும்பாலானோர் பெரியவர்களானதும் நன்றாக சம்பாதிக்கிறார்கள்

பெற்றோர்கள், உடன்பிறந்தார்கள் உறவுகள்பற்றி உள்ளார்ந்த ஈடுபாடில்லாமல், மார்க்கம் மறுமைப்பற்றிய அக்கறையின்றி ஒரு தற்காலிக சந்தோஷத்தில் நடைப்பிணமாக பூமியில் வலம் வருவதை நாம் பார்க்கிறோம். இப்படிப்பட்ட குழந்தைகளால் பெற்றோர்க்கும், மற்றோர்க்கும் என்ன மேலான நன்மைகள் ஏற்பட்டு விட முடியும்?  மார்க்கத்தின் அடிப்படையில் பிள்ளைகளை கட்டியெழுப்பினால் அல்லவா அவர்களுக்கும் உங்களுக்கும் நிரந்தர நன்மைகள் ஏற்படும்?. 
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு குழந்தையும் இயற்கை மார்க்கத்தில் தான் பிறக்கின்றன. அவன் யூதனாகவோ, கிருஸ்தவனாகவோ, நெருப்பு வணங்கியாகவோ ஆவதற்கு பெற்றோர் தான் காரணம்.(புகாரி, முஸ்லிம்)

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர். உங்கள் பொறுப்புகள் குறித்து விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித்தலைவர் அவருடைய குடிமக்களை குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் மனைவி மற்றும் வீட்டிலுள்ளவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவன் அவனின் குழந்தைகள் மற்றும் அவனின் வீடு குறித்து விசாரிக்கப்படுவாள்.   (அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) புகாரி முஸ்லிம்)
லுக்மான் தனது மகனுக்கு அறிவுரை கூறும்போது, என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்.  (அல்குர்ஆன்: 31:13) 

என் அருமை மகனே! கடுகு விதை அளவு இருந்து அது பாறைக்குள்ளோ வானங்களிலோ பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான் அல்லாஹ் நுட்பமானவன். நன்கறிந்தவன். (31:16)
என் அருமை மகனே!தொழுகையை நிலை நாட்டு. நன்மையை ஏவு! தீமையை தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள். அது உறுதி மிக்க காரியமாகும்.(அல்குர்ஆன் :31:17)
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான். (அல்குர்ஆன் :31:18) 
நீ நடக்கும்போது நடுத்தரத்தைக் கடைப்பிடி. உனது குரலை தாழ்த்திக் கொள். குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும் (அல்குர்ஆன் :31:19)
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் குழந்தை ஏழு வயதை அடைந்து விட்டால் தொழுகைக்கு ஏவுங்கள். அவர்கள் பத்து வயதை அடைந்து விட்டால் அவர்களின் படுக்கையை தனித்து அமையுங்கள் (அபூஹூரைரா(ரலி) முஸ்லிம்)
இவ்வாறு இறைமறையும், இறைத்தூதரின் வழிமுறையும் கூறும் அடிப்படையில் வளர்க்கப்படும் ஸாலிஹான குழந்தைகளால் மரணத்திற்குப் பின்னும் நிரந்தர நன்மைகள் ஏற்படுமென்பதை சொல்லவும் வேண்டுமோ?
நிச்சயமாக அல்லாஹ் மகத்தான கருணையாளன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக