கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

புதன், 19 ஜனவரி, 2011

கூட்டு துஆ எனும் கூட்டு பித்அத்!!!

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்” (அல்குர் ஆன் 7:55)

எமது சமுதாயத்தில் ஒருவர் துஆ கேட்க மற்றவர்கள் ஆமீன் சொல்லும் கூட்டு துஆ எனும் (புதிய) வழிபாட்டு முறை ஜனாஸா நல் அடக்கத்தின் போது, ஹஜ் பயனம் செல்லும் போது, கஸ்த் செல்லும் போது என பொதுவாகவும் ஐவேளைத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆ, பொருநாள் தொழுகைகளின் பின்பு என குறிப்பாகவும் இன்னும் சமுக, சமய விவகாரங்கள் போன்ற இன்னோரன்ன விடயங்களிலும் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

மேற்படி (நவீன ) அனுஷ்டானம் இஸ்லாத்தின் மூலாதாரங்களான அல்குர்ஆனிலோ அல்லது நபி வழியிலோ காணப்படும் ஆதாரங்கள் அடிப்படையில் அமைந்த வணக்க முறையா? அல்லது அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித்தந்த நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடுகளில் ஒன்றா? என்பதை இக்கட்டுறையினுடாக விளங்க முற்படுவோம்.

இபாதத் ஒரு விளக்கம்
இஸ்லாத்தின் பார்வையில் இபாதத் எனும் வணக்க வழிபாடுகள் வசதிக்கேற்ப, கால, சூழல், இடத்திற்கேற்ப உருவாக்கிக் கொண்டு அதன் மூலம் இறைவனை நெருங்கும் நோக்கில் செய்து வருபவை அல்ல.

மாறாக வணக்கம் என்று ஒன்றை நாம் செய்வதாக இருந்தால் ஒன்றில் அல்லாஹ்வோ அல்லது அவனது தூதரோ எமக்குக் காட்டித்தந்திருக்க வேண்டும். அவ்வாறு, அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த ஒரு வணக்கத்தை அது காட்டித்தரப்பட்டிருக்கும் முறையில் நாம் செய்ய வேண்டுமே தவிர மனோ இச்சை, சமூக வழக்கு என்பதைக் காரணம் காட்டி மாற்றியமைக்கவோ, கூட்டுதல், குறைத்தல் செய்யவோ தனி நபருக்கோ, அல்லது சமூக நிறுவனங்களுக்கோ அனுமதி கிடையாது என்பதை இதை பின்வரும் அல்குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும் எமக்கு வலியுறுத்துகின்றன.

‘அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.’ (அல்குர்ஆன் 33:36)

அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி
இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.’ (அல்குர்ஆன் 42:2)

‘நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம் 7288)

‘நாங்கள் அஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் ஒன்று கூடினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்குமுன்னர் வாழ்ந்த ஒவ்வோர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாருக்கு எது நன்மை என்பதை அறிந்திருந்தாரோ அதை அவர்களுக்கு அறிவித்தவிடுவதும் எது தீமையென்பதை அறிந்திருந்தாரோ அது குறித்து அவர்களை எச்சரிப்பதும் அவர்மீது கடமையாகவே இருந்தது.’(அறிவிப்பவர்: அப்துழ்ழாஹ் பின் அம்ர் (ரழி), நூல்: முஸ்லிம் 3759)

எனவே, இவ்வாறு பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் தான் கூட்டுத் துஆ என்பது இது ஐங்காலத் தொழுகைக்குப் பின் இடம்பெற்றாலும் அல்லது வேறு பல சந்தர்ப்பங்களில் இடம் பெற்றாலும் அது நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடு என்பதை ஆணித்தரமாகக் கூறுகின்றோம்.

இந்த அடிப்படையில் புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொண்டும் புரியாதது போன்று ‘கூட்டுத் துஆ ஓதக் கூடாது’ என ஏதேனும் தடை உள்ளதா எனக் கேட்கும் சகோதரர்களிடம் ‘கூட்டுத் துஆ ஓதக் கூடாது என தடை செய்யாதீர்கள்’ என ஏதேனும் தடை உள்ளதா? என நாம் கேட்டால் என்ன பதில்களை சொல்வார்களோ அதே பதில்கள்தான் அவர்களது ‘கூட்டு துஆ ஓதக் கூடாது’ என்று தடை உள்ளதா என்ற கேள்விக்கும் பதிலாகும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேற்படி சாரரர் இக்கூட்டு துஆ எனும் வழிகேட்டுக்கு முட்டுக் கொடுப்பதற்காக வேண்டி சில ஆதாரங்களை (!!!) மக்கள் மத்தியில் முன் வைக்க எத்தனிக்கின்றார்கள் என்பதனால் அவைகளில் இரண்டை மாத்திரம் இவ்விடத்தில் நோக்குவது பொருத்தமாகும்.

கூட்டுத் துஆவை தூக்கி முன்வைக்கப்படும் ஆதாரங்கள் அனைத்தும் ஒன்றில் பலவீனமானதாகவோ அல்லது கூட்டு துஆவுடன் சம்மந்தமில்லாததாகவோ காணப்படுகின்றன. அவைகளில் இரண்டை மாத்திரம் இவர்கள் காட்டும் ஆதாரங்களின் தராதரத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு குறிப்பிடுகின்றோம்.

சூறா யூனூஸ் 89ம் வசனத்தில் அழ்ழாஹ் மூஸா (அலை) ஹாரூன் (அலை) ஆகிய இருவரையம் பார்த்து ‘உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது’ எனக் கூறுகின்றான். ஆனால் அதற்கு முந்திய வசனத்தில் மூஸா (அலை) அவர்கள் மாத்திரம்தான் அழ்ழாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள். எனவே, மேற்படி சந்தர்ப்த்தில் மூஸா (அலை) அவர்கள் பிரார்த்திக்க – துஆ ஓத ஹாரூன் (அலை) அவர்கள் ஆமீன் சொன்னார்கள் எனக் கூறும் இவர்கள் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக இமாம் பைஹகீ அவர்களின் சுஅபுல் ஈமான் எனும் கிரந்தத்தில் இடம்பெறும் அனஸ் (ரழி) அவர்களின் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.
எனினும் மேற்படி செய்தியை அனஸ் (ரழி) அவர்களிடம் இரந்து அறிவிக்கும் ஸர்பீ பின் அப்துழ்ழாஹ் என்பவர் பலவீனமானவர். அனஸ் (ரழி) அவர்களிடம் இருந்து ஆதாரமற்ற செய்திகளை அறிவிப்பவர் என அறிவிப்பாளர் பற்றி ஆய்வு செய்த அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

‘ஒரு கூட்டம் ஒன்று சேரந்து சிலர் பிரார்த்திக்க ஏனையவர்கள் ஆமீன் சொன்னால் அதை அல்லாஹ் நிச்சயமாக ஏற்றுக் கொள்வான்’ என தபரானி, இப்னு அஸாகிர், ஹாகிம் ஆகிய கிரந்தங்களில் இடம் பெறும் மற்றொரு செய்தியையும் இவர்கள் தங்களது கூற்றுக்கு ஆதாரமாக முன் வைக்கின்றனர்.

எனினும், இச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஆசிரியர்களில் ஒருவரான ஹபீப் பின் மஸ்லமா (ரழி) என்பவர் ஹிஜ்ரி நாற்பத்தி இரண்டாம் ஆண்டு மரணித்து விடுகின்றார். இந்த ஆசிரியரிடமிருந்து இச்செய்தியை அறிவிக்கும் மாணவரான இப்னு ஹுபைரா என்பரோ ஹிஜ்ரி நாற்பத்து ஓராம் ஆண்டில்தான் பிறக்கின்றார். எனவே, ஆசிரியர் மரணிக்கும் போது ஒரு வயதுக் கைப்பிள்ளையாக இருந்த பாலகர் நிச்சயமாக இச்செய்தியைக் கேட்டிருக்கவே முடியாது என்பதால் இச்செய்தி ‘அறிவிப்பாளர் வரிசை தொடர்பு அறுந்த பலஹீனமான செய்தியாகும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறு பலஹீனமான சில ஆதாரங்களையும் வேற சில கூட்டுத் துஆவுடன் சம்பந்தமில்லாத ஆதாரங்களையும் வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களால்காட்டித் தரப்படாத நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடு ஒன்றை ஆதரிக்க முற்படுவது ஒரு முஸ்லிமுக்கு பொருத்தமல்ல என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேலும், மக்களை நரகத்திற்கு இட்டுச் செல்லும் இக் கூட்டு துஆவை ‘சில்லறைப் பிரச்சினை’ என விமர்சிப்பவர்களும், ‘மஸ்அலா’ பொது நலன் அடிப்படையில் கூட்டு துஆவும் ஓதலாம், குனூத்தும் ஓதலாம் என பத்வாச் சொல்பவர்களும் இவ்விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வதுடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட தவறுகளில் இருந்து தம்மைத் திருத்திக் கொண்டு இந்த பித்அத்தை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்த முன் வர வேண்டும்.
நன்றி:மௌலவி நௌபர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக