கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

வெள்ளி, 28 ஜூன், 2013

இலகுவாக கிடைத்த இஸ்லாம்!

கண்ணியத்துக்குரிய வல்ல நாயன் தன் திருமறையில்: 

அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே! (அல்குர்ஆன் 3:19) மேலும்,இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார்.(அல்குர்ஆன் 3:85)

நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடம்,இணைவைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு இழைத்த மிகக் கடுமையான துன்பம் எதுவென்று எனக்கு அறிவியுங்கள்!என்று கேட்டேன்.அதற்கவர்கள் கூறினார்கள்: ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் வளாகத்தில் (ஹிந்த் பகுதியில்) தொழுது கொண்டிருந்த போது, உக்பா பின் அபீமுஜத் என்பவன் முன்னோக்கி வந்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது தோளைப் பிடித்து தன் துணியை அவர்களது கழுத்தில் போட்டு முறுக்கி (மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்தான். அப்போது அபூபக்கர்(ரலி) அவர்கள் முன்னால் வந்து அவனது தோளைப் பிடித்து இழுத்து விட்டு, (நபியவர்களைத் துன்புறுத்த விடாமல் தடுத்து) என் இறைவன் அல்லாஹ் தான் என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார் (அல்குர்ஆன் 40:28) என்று கேட்டார்கள். (உர்வா பின் ஸூபைர் (ரஹ்) புகாரி 4815, 3678,3856)

இஸ்லாம் என்பது தியாகங்களால் எழுப்பப்பட்ட மாளிகை! அலட்சியமாகவோ ஏனோ தானோ என்றோ பின்னப்ட்டதல்ல.ஏதோ பத்தோடு பதினொன்றாக தத்துவமாகவோ புரியாத புதிராகவோ சொல்லப்பட்டதல்ல.

மனித சமூகத்தை வீண் கற்பனைகளிலும் கனவுகளிலும் மிதக்க வைக்க வந்த புராணக் கதைகளின் கோர்வையுமல்ல.மாறாக உண்மை இறைவனின் உள்ளமையையும் வல்லமையையும் உணர்ந்து யதார்த்த வணக்கங்களால் ஏக நாயனை பணிந்து வாழ வகை செய்யும் உயர்வான கொள்கையே இஸ்லாம்.

அஞ்ஞானமும் அறியாமையும் காரிருளாய் மனித சமூகத்தை பீடித்து அழிவின் விளிம்பில் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த போது கருணையாளனின் கிருபையால் ஏகத்துவப் போராளி நபியின் வழியாக வேதத்தின் வழியாக மனித சமுதாயத்தின் ஒரு கூட்டத்தை எட்டியது. அந்தப் போராளியை உயிரினும் மேலாக அந்தக் கூட்டம் கருதியது.பற்றிப் பிடித்தது. அதற்காக அதைப் பின்பற்றுவதற்காக அந்தக் கொள்கையின் வளர்ச்சிக்காக எத்தகைய அர்ப்பணிப்பையும் செய்யத் தயாரானது!

உயிரானாலும், பொருளானாலும், குடும்பம், நட்பு, எந்தவொன்றையும் இறைக்கொள்கைக்காக தியாகம் செய்யத் தயாரானது. செய்தது. அத்தகைய தியாகத்தால் உலகில் இஸ்லாம் சுவடுபதிக்காத இடமே இல்லை என்கின்ற அளவுக்கு வளர்ந்து மேன்மையுற்றது.

சிந்தனைகளும், செயல்களும் அல்லாஹ்வுக்காக என்ற நிலையே அவர்களிடம் மேலோங்கியிருந்ததால் இஸ்லாத்தினால் அவர்களும்,அவர்களால் இஸ்லாமும் சிறப்புற்றது. ஹிஜ்ரத் என்பது இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு! கொள்கை வளர்ச்சிக்கு ஹிஜ்ரத் ஒரு திருப்பு முனையாகவும் அமைந்தது. 

ஹிஜ்ரா என்பது தனது எல்லா உலக ஆதாயங்களையும் இழந்து சொந்த மண்ணில் உள்ள உடமைகளை அப்படியே விட்டு விட்டு தன்னையும் தனது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்ள தனது சொந்த 

நாட்டை,சொந்த ஊரை துறந்து அன்னிய நாட்டுக்கு அன்னிய ஊருக்கு செல்வதாகும். செல்லும் வழியில் அல்லது செல்வதற்கு முன் பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டி வரும்.உயிர் பறிபோகலாம். உடமைகள் அபகரிக்கப்படலாம். செல்லுமிடத்தில் எத்தகைய எதிர்காலத்தை முன்னோக்க வேண்டியிருக்குமோ?அங்கு என்னென்ன கவலைகளும் துக்கங்களும் துயரங்களும் மறைந்திருக்கின்றனவோ? என்று எதுவும் அறியாத நிலையில் மேற்கொள்ளப்படும் பயணமே ஹிஜ்ரத்தாகும்.

இவை அனைத்தையும் தெரிந்துதான் முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்யத் தொடர்ந்தனர். முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்து ஓரிடத்தில் ஒன்று கூடிவிட்டால் தங்களுக்கு ஆபத்துகள்  ஏற்படலாம் என்று உணர்ந்திருந்த மக்கா முஷ்ரிக்குகள் முஸ்லிம்களை ஹிஜ்ரா செய்ய விடாமல் தடுத்தனர்.இதற்கு சில உதாரணங்களை இங்கு பார்ப்போம்.

ஹிஜ்ரா செய்த முதல் கூட்டத்தில் அபூஸலமாவும் ஒருவர். இவர் இரண்டாவது அகபாவிற்கு ஒரு வருடத்திற்கு முன் ஹிஜ்ரா செய்தார். அபூஸலமா(ரலி) தனது மனைவியுடனும், தனது சிறிய குழந்தையுடனும் ஹிஜ்ரா செய்ய நாடியபோது  அவரது மனைவியின் உறவினர்கள் அபூஸலமாவை நோக்கி நீ எங்களை புறக்கணித்து விட்டதால், நீ வேண்டுமானால் சென்று விடு: எங்களுடைய பெண்ணை ஊர் ஊராக அழைத்துத் திரிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அவரின் மனைவியையும் குழந்தையையும் அவரிடமிருந்து பிரித்து விட்டனர்.

இதைப் பார்த்த அபூஸலமாவின் குடும்பத்தினர் நீங்கள் உங்களது பெண்ணை எங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரித்து வீட்டீர்கள்.எனவே, எங்கள் மகனுக்குப் பிறந்த குழந்தையை நாங்கள் உங்கள் பெண்ணுடன் விட மாட்டோம் என்று சண்டையிட்டு குழந்தையைப் பறித்துக் கொண்டனர். இதே நிலையில் அபூஸலமா மதீனாவை நோக்கி பயணமானார்.

தனது கணவனும் சென்றுவிட குழந்தையையும் பறிகொடுத்த உம்முஸலமாவின் உள்ளம்; வேதனையால் வெந்தது.ஒவ்வொரு நாள் காலையிலும் அப்தஹ் என்ற இடத்திற்கு வந்து மாலை வரை அழுது கொண்டே இருப்பார்.அழுதே ஒரு வருடத்தைக் கழித்து விட்ட நிலையில் அவரது குடும்பத்தினரின் உள்ளத்தில் அவர் மீது இரக்கம் பிறந்தது. நீ உனது கணவனுடன் சென்று சேர்ந்துக் கொள் என்று அனுமதித்து, அவரின் பிள்ளையையும் அபூஸலமாவின் குடும்பத்தாரிடமிருந்து வாங்கித் தந்தனர். ஏறக்குறைய 500 கி.மீ. தொலைவுள்ள மதீனாவை நோக்கி பயணமானார். உயர்ந்த மலைகள் அபாயம் நிறைந்த வழிகள் அல்லாஹ்வின் படைப்பினங்களில் யாரும் உடன் இல்லை. இருந்தபோதும் மதினாவை நோக்கி  மாதர்குல மாணிக்கம் ஹிஜ்ரத் செய்தார்கள்.

அவனது திருப்தியை நாடுவோருக்கு இதன் மூலம் அல்லாஹ் ஈடேற்றத்தின் வழிகளைக் காட்டுகிறான். தன் விருப்பப்படி அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு செல்கிறான். அவர்களுக்கு நேரான வழியைக் காட்டுகிறான். (அல்குர்ஆன். 5:16)

நம் கையில் இன்றைக்கு தவழும் இந்த திருக்குர்ஆன் எவ்வளவு சிரமத்திற்கிடையில் தொகுக்கப்பட்டது என்றால்,  யமாமா போர் நடைபெற்றபின் கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். அங்கே அவர்களுடன் உமர்(ரலி) அவர்களும் இருந்தார்கள். உமர்(ரலி) அவர்கள் என்னிடம் வந்து, இந்த யமாமா போரில் ஏராளமான குர்ஆன் அறிஞர்கள் கொல்லப்பட்டு விட்டனர். பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளாமான பேர் கொல்லப்பட்டு அதனால் குர்ஆனின் பெரும்பகுதி போய்விடுமோ என நாள் அஞ்சுகிறேன். ஆகவே தாங்கள் திரட்டி ஒன்று சேர்க்க உத்தரவிட வேண்டுமென நான் கருதுகிறேன் என்று கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படி செய்வது என உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! 

இது நன்மையான பணிதான். இதற்காக என் மனதை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். உமர் அவர்கள் கருதியதையே நானும் கண்டேன். அபூபக்கர் (ரலி) அவர்கள், நீங்கள் புத்திசாலியான இளைஞர். உங்களை நாங்கள் சந்தேகப்பட மாட்டோம்.நீங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்காக வஹி எழுதக் கூடியவர்களாக இருந்தீர்கள்.  எனவே நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து ஒன்று திரட்டுங்கள் என்று கூறினார்கள். 

அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளை யிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. ஆகவே நான் குர்ஆனை திரட்ட தேடினேன். அவற்றை பேரீச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் மனிதர்களில் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன்.அத்தவ்பா எனும் அத்தியாயத்தின் கடைசி வசனங்களை அபூ குஸைமா அல் அன்சாரி (ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்.அவரல்லாத வேறொருவரிடமிருந்தும் இதனை நான் பெறவில்லை. அவை உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்கு சிரமமாக இருக்கிறது.மேலும்,உங்கள் விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப் பரிவும், கருணையுடையவராகவும் இருக்கின்றார். பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறி விடும். அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.அவனையே நான் முழுமையாக சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தில் அதிபதி(9: 127-128) என் வாயிலாக திரட்டித் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் அபூபக்கர், உமர் பின்னர் ஹப்ஸா அவர்களிடம் இருந்தது.(ஸைத் பின் ஸாபித் அல் அன்சாரி (ரலி) புகாரி 4986)

ஹதிஸ் என்று நாம் சொல்லி வருகின்ற நபிமொழிகள் நம் கைகளுக்கு கிடைப்பதற்காக தொகுத்த கஷ்டம் எந்தளவுக்கென்றால்: 

நபிமொழிகளை அதிகமாக அபூஹூரைரா அறிவிக்கிறாரே என்று மக்கள் கூறிக் கொண்டிருந்தனர்.நான் என் பசி அடங்கினால் போதும் என்று, நபி(ஸல்) அவர்களுடன் எப்போதும் இருந்து வந்தேன். புளித்து உப்பிய ரொட்டியை நான் உண்பதுமில்லை. அழகிய துணியை அணிவதுமில்லை. இன்னவளோ எனக்கு பணி விடை செய்வதுமில்லை. பசியின் காரணத்தால் நான் என் வயிற்றில் கூழாங்கற்களை வைத்துக் கட்டிக் கொண்டிருந்தேன். என்னை ஒரு மனிதர் அழைத்துச் சென்று எனக்கு அவர் உணவளிக்க வேண்டுமென்பதை உணர்த்துவதற்காக(எனக்கு விருந்தளியுங்கள் என்ற பொருள் கொண்ட) அக்ரினி எனும் சொல்லை மாற்றி அக்ரிஃனி (எனக்கு இறைவசனத்தை ஓதி காட்டுங்கள்) என்பேன். அவ்வசனம் முன்பே மனப்பாடமாக இருக்கும். ஜாபர் பின் அபீதாலிப் அவர்கள் ஏழைகளுக்கு உதவி செய்வார். அவர் எங்களை அழைத்து சென்று தம் வீட்டில் இருக்கும் உணவை எங்களுக்கு அளிப்பார். எந்தளவிற்கென்றால் அவர் எதுவுமில்லாத நெய்ப் பையை எங்களிடம் கொண்டு வந்து அதைப் பிளந்து விடுவார். நாங்கள் அதில் இருப்பதை நக்கி உண்போம் (அபூஹூரைரா(ரலி) புகாரி 3708)

அல்லாஹ்வின் நல்லடியார்களே! மேற்சொன்ன சம்பவங்கள் இஸ்லாமிய வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சில தேன்துளிகள். இதுபோன்ற இன்னும் ஏராளம் உள்ளன. இவற்றை இங்கு குறிப்பிடக் காரணம் படைத்த இரட்சகனிடமிருந்து தங்களுக்கு கிடைத்த நேர்வழிக்காக கஷ்டங்கள் சிரமங்கள் துன்பங்கள் அனைத்தையும் இலகுவாக எடுத்துக் கொண்டு தங்கள் இறைவன் அருளிய ஈமானை தியாகங்களால் அலங்கரித்துக் கொண்டது முன்சென்ற அந்தக் கூட்டம். எந்த நிலை வந்தபோதும

அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றையே தங்களின் நோக்கமாக இலட்சியமாக கொண்டு செயல்பட்டது அந்தச் சமுதாயம்.அழைப்புப் பணியை கண்கவர் வித்தைகளால் அல்லாமல் உயிரோட்டமாய்ச் செய்து சிறந்த சமுதாயம் என்று பேர் பெற்றுக் கொண்டது.

இன்றைக்கு நாம் எப்படி இருக்கிறோம்? நம்முடைய செயல்பாடுகள் எப்படி உள்ளன? நம்முடைய ஈமானை எவ்வாறு அலங்கரித்துள்ளோம். தியாகங்களாலா? அல்லது சோம்பேறித்தனங்களாலா? குர்ஆனையும் ஹதிஸையும் ஆய்வு செய்து ஈமானை பாலிஷ் செய்து வைத்திருக்கிறோமா? அல்லது மூடநம்பிக்கைகளால் இருள்படிய விட்டிருக்கிறோமா?

இஸ்லாம் என்ற நேர்வழியைப் பெற்றதற்காகவோ, அல்லது பெறுவதற்காகவோ எத்தகைய சிரமங்களை நாம் சந்தித்தோம்? போராட்டங்களோ, யுத்தங்களோ செய்யாமலேயே இலகுவாகக் கிடைத்திருக்கும் இஸ்லாம் என்ற அருட்கொடையை எப்படிப்பட்ட மதிப்பிலும் மரியாதையிலும் நாம் கண்ணியப்படுத்துகிறோம்? அல்லாஹ் என்ற இரட்சகன் அல்லவா உண்மையான இறைவன்! அவன் மட்டுமல்லவா இந்த பிரபஞ்சத்தின் அதிபதி! அவனது பேரருளால் அவனை நாம் உணர்ந்திருக்கிறோமா? அத்தகைய இரட்சகனுக்கு அன்றாடம் நாம் செய்ய வேண்டிய கடமைகளை அழகுற செய்கிறோமா?

பள்ளிக்கு செல்ல தயக்கம்! வீட்டின் அருகாமையிலேயே பள்ளி இருக்கும். ஆனால் அதனுடன் தொடர்புகளை வளர்த்துக் கொள்வதில்லை. பள்ளிக்குச் செல்வதால் கிடைக்கும் நன்மைகளையெல்லாம் தெரிந்து வைத்திருப்போம். இருந்தும் செயல்பாடுகளில் தடுமாற்றம். 

தொழுகையின் மகத்துவம் நமக்கெல்லாம் புரியும். இருப்பினும் அக்கறையின்மை. பாங்கோசை பற்றி எல்லோர்க்கும் தெரியும். எதற்குண்டான அழைப்பு இந்த பாங்கு? எதற்காக நேரந்தவறாமல் அழைக்கிறார்கள்? நமக்கெல்லாம் தெரியும். இருப்பினும் அந்த அருமையான அழைப்புக்கு பதில் சொல்ல நமக்கு வெட்கம். இன்னும் பெரும்பாலோருக்கு பாங்குக்கு பதில் சொல்லத் தெரிவதேயில்லை.எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

முஸ்லிம் என்ற அடையாளத்திற்காக வீடுகளில் குர்ஆன் இருக்கிறது. அதனுடைய உண்மையான பெருமையை நாம் உணர்வதில்லை. அந்த திருமறை பறைசாற்றும் உண்மையை அறிவதில் ஆர்வமுமில்லை. ஆய்வுகளும் செய்வதுமில்லை. எப்பேர்ப்பட்ட கருணையாளனிடமிருந்து அது அருளப்பட்டிருக்கிறது. அதை எப்படி எல்லாம் பேணிக் கொள்ள வேண்டும் என்பதில் நம்மிடையே அலட்சியத் தன்மையே நிறைந்துள்ளது. ஓர் இறை வேதம் இதற்காகவா அருளப்பட்டது? அதை தொகுத்துத்தந்த நன்மக்களின் உழைப்பு எத்தகையதாயிருந்தது என்பதை சிந்தித்துப் பார்த்தோமா? 

கனவுகளும் கற்பனைகளும் உலக வாழ்வைப் பற்றியே நம் மனதில் அதிகம் நிறைந்துள்ளது. இந்த நிலை நம் மார்க்க வாழ்வுக்கு நமக்கு உதவிகரமானதாக அமையுமா? என்பதை சிந்தித்துப் பார்த்து நம் மறுமை வாழ்வு சிறக்க முயற்சி செய்ய வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக