கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

சட்டமன்றத்தில் ஒரு ஜனாஸா!

(நம்மை) மறுப்போரை நாம் விட்டு வைத்திருப்பது அவர்களுக்கு நல்லது” என்று அவர்கள் நினைக்க வேண்டாம். பாவத்தை அவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்காகவே விட்டு வைத்துள்ளோம். இழிவுபடுத்தும் வேதனை அவர்களுக்கு உண்டு. Al Quran: 3:178

தமிழ்நாட்டில் இந்த ஆண்டின் மொத்த வருவாய் 85,685 கோடி ரூபாய்! இதில் ஐந்தில் ஒரு பகுதி மது விற்பனை மற்றும் அதற்காக விதிக்கப்படும் வரிகள் மூலம் கிடைக்கின்றது.
இப்படி ஒரு வருவாயை ஈட்டுகின்ற மாநில அரசு மதுக்கடைகளை மூடுகின்ற அளவுக்கு முன்வருமா? ஒருபோதும் வராது.
தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமலாகுமா?என்ற கேள்விக்கு சட்டமன்றத்தில் ஆயத்தீர்வை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பதில் வருமாறு:

டாஸ்மாக் மூலம் அரசின் கருவூலத்திற்கு 14 ஆயிரம் கோடி வருகின்றது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் இந்த வருவாய் சமூக விரோதிகளுக்கும் தனியார் சாராய சாம்ராஜ்யத்திற்கும் சென்று விடும்.
இந்தச் சில்லறை மதுக்கடைகள் ஈட்டுகின்ற வருவாய்க்கு ஈடுகட்டுகின்ற வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்கினால் மாநில அரசு அவற்றை மூடுவதற்குத் தயார்.

சுற்றியிருக்கும் அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லாத போது தமிழகத்தில் மட்டும் அதை அமல்படுத்துவது அசாத்தியம்.
ஆனால் மதுவின் தீமைகளை விளக்கும் முகாம்களையும் மறுவாழ்வு மையங்களையும் அமைத்து மக்களை மதுவின் பிடியிலிருந்து காப்பாற்றும் முயற்சிகளை அரசு மேற்கொள்கின்றது.
மதுவின் தீமைகளிலிருந்து மக்களைக் காப்பதற்காக சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம், திருவள்ளுவர் தினம், காந்தி பிறந்த தினம், மஹாவீர் ஜெயந்தி, வள்ளலார் தினாம், முஹம்மது நபி பிறந்த தினம் ஆகிய தினங்களில் டாஸ்மாக்கிற்கு அரசு விடுமுறை அளிக்க உள்ளது.
இதுதான் மதுவிலக்கு (?) துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பதில் ஆகும்.



அமைச்சரின் இந்தப் பதிலில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்குத் தடையாக இருப்பது வருவாய் தான் என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.
இன்று பத்தாம் வகுப்பு மாணவர்கள் உட்பட இளைய தலைமுறையினர் குடிகாரத் தலைமுறையாக உருவெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
சாலை விபத்துக்களில் அதிகமான சதவிகிதம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படுவது தான்.
மனைவி மக்களை அடிப்பது, கொலை செய்வது, குடும்ப அமைப்பைச் சிதைத்து சின்னாபின்னமாக்குவது போன்ற கொடுமைகளுக்குக் காரணமாக அமைவது மது தான்.
ஆக அனைத்துத் தீமைகளுக்கும் அடிப்படையான, வீட்டையும் நாட்டையும் அழிக்கின்ற மதுவை, அதில் கிடைக்கின்ற வருவாய் காரணமாக அரசு ஒழிக்க மறுக்கின்றது. மக்கள் நலனைக் காக்க வேண்டிய அரசுகள், மக்களைக் கொலை செய்யும் அரசாக மாறியுள்ளன.

மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும் என்று காரணம் சொல்கின்றார் அமைச்சர்.மதுவிலக்கை ரத்துச் செய்து விட்டு, தமிழகத்தில் முதன்முதலில் மதுக்கடைகளைத் திறக்கும் போது அப்போதைய முதல்வர் கருணாநிதி சொன்ன காரணம் தான் இது.அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு இல்லாத போது தமிழகத்தில் அமல்படுத்துவது அசாத்தியம் என்று கூறுகின்றார்.

இதுவும் கருணாநிதி அன்று கூறியது தான். சுற்றியும் பற்றி எரிகின்ற வளையத்தின் நடுவே தமிழகம் ஒரு சூடத்தைப் போன்று இருக்கின்றது. அது பற்றாமல் இருக்க முடியாது என்று கருணாநிதி அவருக்கே உரிய இலக்கிய நடையில் சொன்னதைத் தான் இன்று நத்தம் விஸ்வநாதன் சாதாரண நடையில் சொல்கின்றார்.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பதிலுக்கு தினமணி வைத்தியநாதன் தனது தலையங்கத்தில், “லஞ்சம் இன்று எல்லா மட்டத்திலும் ஆட்டிப் படைக்கின்ற அரக்கனாக இருக்கின்றது என்பதால் அதைச் சட்டப்பூர்வமாக ஆக்க முடியுமா?’ என்று சரியாகக் கேட்டிருக்கின்றார்.
குடி குடியைக் கெடுக்கும்

மதுவின் தீமைகளை விளக்க முகாம்களும் மாவட்டம் தோறும் அமைக்கப் போகின்றார்களாம். தீயைக் கொளுத்தி எரிய விட்டு விட்டு, அதை அணைக்காமல் தீயினால் ஏற்படும் பாதிப்பைப் பற்றி பாடம் நடத்தப் போகிறார்களாம். அத்தனையும் கேலிக் கூத்து!

அரசாங்க விடுமுறை நாட்களில் மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப் போகிறார்களாம். விடுமுறைக்கு முந்தைய நாளே மது வாங்கி வைக்கத் தெரியாத பச்சைப் பாலகர்கள் தான் குடிகாரர்களாக இருக்கிறார்களா? எப்படியெல்லாம் காதில் பூச்சுற்றுகிறார்கள்.
தேர்தல் நடைபெறுகின்ற நாளில் மட்டுமல்லாமல் அதற்கு முந்தைய நாள், பிந்தைய நாள், வாக்கு எண்ணும் நாள் போன்ற நாட்களில் மதுக்கடைகளுக்கு அரசு விடுமுறை அளிக்கின்றது. புத்தி சுவாதீனத்துடன் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக! ஆள்வோரைத் தேர்வு செய்வதற்குத் தெளிவான அறிவு தேவை! அதனால் தான் மதுக்கடைகளுக்கு இந்த மூடுவிழா!
அன்றாடம் தன்னுடைய ஒவ்வொரு குடும்ப விவகாரத்திலும் எல்லா குடிமகனுக்கும் தெளிவான அறிவு இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட மத்திய, மாநில அரசுகளுக்கு இல்லை என்பதை நாம் இங்கு தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.

ஒரு மாநில அமைச்சர் சட்டமன்றத்தில் மதுவிலக்கை அமல் செய்ய முடியாது என்று சொல்கிறார். மதுவை அரசாங்கமே விற்பனை செய்யும் என்கிறார். அந்தப் பணத்தில் தான் அரசை நடத்துகிறோம் என்கிறார். இப்படி சட்டமன்றத்தில் அறிவிக்கும் போது ஒரு முஸ்லிமின் கடமை என்னவாக இருக்க வேண்டும்? இதோ நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:
உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியா விட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம் 70

ஆனால், சாதனை படைக்கப் போகிறோம்; சாக்கடையைச் சுத்தம் செய்யப் போகிறோம்; நாங்கள் சமுதாயத்தின் மற்ற அரசியல் கட்சிகளைப் போன்று அல்ல. மானம் காக்கப் போகிறோம் என்று புறப்பட்ட ம.ம.க. தலைவர் சட்டமன்றத்தில் என்ன செய்து கொண்டிருந்தார்?
சாய்மான நாற்காலியில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் கட்டையாக – தப்பித் தவறி வெளிநடப்பு செய்து விட்டால் அம்மாவின் கோபத்திற்கு ஆளாகி விடுவோமே என்று சத்தியம் செய்து கொண்டு நாற்காலியில்

அட்டையாக ஒட்டிக் கொண்டு இருக்கின்றார்.
இஸ்லாமிய ஆட்சி என்று வாய்கிழியப் பேசிய வாத்தியார் இவர். அப்போது பேசியதெல்லாம் புரட்சி! இப்போது பேசுவதெல்லாம் புரட்சித் தலைவி (?) புகழ்ச்சி!இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், இந்த விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, “மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழியப் பேசுபவர்கள் தான் கள்ளச் சாராயம் காய்ச்சுகிறார்கள்” என்று கூறினார்.

கடந்த ஆட்சியில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று முற்றுகைப் போர் நடத்தினார் இந்த மமக தலைவர். ஆனால் அவரது நெஞ்சம் நிறைந்த சகோதரி, மதுவிலக்கு கேட்பவர்கள் கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள் என்று சர்ட்டிபிகேட் கொடுக்கிறார். அதுவும் இவர் சதாவும் அம்மா புகழ் பாடிக் கொண்டிருக்கும் சட்டசபையிலேயே இதை அறிவிக்கிறார். அதையும் கேட்டுக் கொண்டு இந்த ஜனாஸா அசையாமல் இருந்து கொண்டிருக்கின்றது.
புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தனது சமுதாயத்திற்குப் பாதிப்பு என்றதும் வெளிநடப்பு செய்கின்றார். கம்யூனிஸ்ட்கள் வெளிநடப்பு செய்கின்றனர்.

ஆனால் இவரோ ஆளும் கட்சியின் அடிமைச் சின்னமாக அடங்கிக் கிடக்கின்றார். அல்லாஹ்வுக்காக அவனது மார்க்கத்திற்காக, சமுதாயத்திற்காக இந்த மதுவிலக்கு விவாதத்தின் போது மேற்கண்ட ஹதீஸ் அடிப்படையில் குறைந்தபட்சம் வெளிநடப்பாவது செய்திருக்க வேண்டும். அதை இவர் செய்ய மாட்டார். இவர்கள் மானம் காக்கப் புறப்படவில்லை. சமுதாய மானத்தை அடகு வைத்து விட்டு மவுனம் காக்கவே புறப்பட்டிருக்கின்றார்கள். மரணமாகி ஜனாஸாவாகக் கிடக்கின்றார்கள்.
இவர்கள் சட்டசபையில் ஜெயலலிதா புகழ் பாடுவதும், முந்தைய அரசை வசை பாடுவதுமாக இருந்து கைதட்டல் பெறுவதிலேயே குறியாக இருந்தனர் என்று நாளிதழ்கள் குறிப்பிடும் அளவுக்கு சமுதாயத்தைக் கேவலப்படுத்தி விட்டார்கள்.

ஏகத்துவம் இதழுக்கு இவர்களை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. பிற அரசியல் கட்சிகளைப் போன்று எங்களுக்கும் தேர்தலில் நிற்க ஆசை, அதனால் போட்டியிடுகிறோம் என்று இவர்கள் சொல்லியிருந்தால் இவர்களை நாம் கண்டுகொள்ள மாட்டோம். ஆனால் இவர்கள் சமுதாயத்தின் மானம் காக்கப் புறப்பட்டு விட்டோம்; நாங்கள் மற்றவர்களைப் போன்றல்ல. நாங்கள் வித்தியாசமானவர்கள் என்று சமுதாயத்தின் பெயரை விற்றதால் அவர்களை விமர்சிக்கின்றோம்.குஜராத்தில் 2000 முஸ்லிம்களைக் கொன்று குவித்த நரபலி மோடியை பதவியேற்பு விழாவுக்கு ஜெ. அழைத்து வந்தார். அதற்குப் பிறகும் இவர்கள் புகழ் பாடுவதை நிறுத்தவில்லை.

குஜராத் போன்ற கலவரங்களில் பாதிக்கப்படுவது முஸ்லிம்கள் தான் என்பதால் மதக் கலவரத் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கோரிக்கையாக இருந்தது. அதை மத்திய அரசு நிறைவேற்ற முன்வந்த போது நரபலி மோடி கும்பலுடன் சேர்ந்து கொண்டு ஜெயலலிதா அந்தச் சட்டத்தை எதிர்த்து தனது பாசிச சிந்தனையை உறுதிப்படுத்தினார். அப்போதும் இவர்கள் அம்மாவைத் துதி பாடுவதை விடவில்லை.குஜராத்தில் முஸ்லிம்களின் பிணத்தின் மீது ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் நரபலி மோடி, அமைதிக்காக உண்ணாவிரதம் இருக்கின்றாராம். 2000 முஸ்லிம்களைக் கொன்றதை மூடி மறைக்கும் இந்த மோடி வித்தைக்குப் பறந்தோடி ஆதரவளித்த ஜெயலலிதா, தனது சகாக்கள் மைத்ரேயன், தம்பிதுரை ஆகியோரை அனுப்பி வைத்து முஸ்லிம்களின் மீதான இனப் படுகொலைக்கு அங்கீகாரம் வழங்கினார். அதையும் இவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இத்தனைக்குப் பிறகும் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் வழங்குவதாகப் பல்லிளித்து பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுக்கிறார் ஜவாஹிருல்லாஹ்.
முஸ்லிம்களைக் கொன்று குவிப்பதை ஆதரிப்பதற்கும், அவர்களுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கும் ஒரு சட்டத்தை எதிர்ப்பதற்கும் நூறு மதிப்பெண் கொடுக்கும் இந்த வாத்தியார், சங் பரிவாரத்தின் ஊதுகுழலாகி விட்டார் என்று தானே அர்த்தம்?

இத்தனைக்குப் பிறகும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிக்காகப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேரம் படியாமல் இவர்களின் நெஞ்சம் நிறைந்த சகோதரி இவர்களைக் கழற்றி விட்டு விட்டதால், ஜெயலலிதா மோடியின் தோழி, கலவரத் தடுப்பு மசோதாவை எதிர்த்தவர், கரசேவைக்கு ஆளனுப்பியவர், அதனால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்வார்கள். உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னர், மறுபடியும் அம்மா புகழ் பாட ஆரம்பிப்பார்கள். இன்னும் நான்கரை வருடங்களை ஓட்ட வேண்டுமே!
இலங்கையில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த விடுதலைப் புலிகளை தங்களது இழிவான அரசியல் லாபத்திற்காக ஆதரிப்பதற்கும் இவர்கள் தயங்குவதில்லை. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, காவல் கண்காணிப்பாளர் முஹம்மது இக்பால் உள்ளிட்டோரை மனித வெடிகுண்டு மூலம் உடல் சிதற வைத்த தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை கொடுக்கக் கூடாது; மன்னிப்பளித்து கருணை காட்ட வேண்டும் என்று கூறுகிறார்கள் என்றால், கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற அல்லாஹ்வின் சட்டத்தையும் குறை காணத் தயாராக விட்டார்கள் என்று தானே அர்த்தம்.

ஆக, இவர்களின் நோக்கம், குறிக்கோள், லட்சியம் எல்லாமே தாங்கள் போட்டியிடும் ஒருசில சீட்டுக்கள் தானே தவிர, சமுதாயம் அழிந்து போவதைப் பற்றிக் கூட இவர்கள் கவலைப்படவில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக நிரூபித்து விட்டார்கள்.சட்டமன்ற வரலாற்றில் சமுதாயத்திற்கு வாய்த்த எம்.எல்.ஏ.க்களில் இவர்களைப் போன்று கேடுகெட்டவர்கள் எவரும் இருந்ததில்லை.
source: www.tntjcovai.com

0 கருத்துகள்:

கருத்துரையிடுக