கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

செவ்வாய், 28 ஜனவரி, 2014

7 சதவீத இடஒதுக்கீடு கோரி முஸ்லிம்கள் போராட்டம்!

சென்னை, -முஸ்லிம்களுக்கு 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னையில் நடந்த சிறை செல்லும் போராட்டத்தில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
சிறை செல்லும் போராட்டம்
மத்தியில் 10 சதவீதமும், தமிழகத்தில் 7 சதவீதமும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னை, திருச்சி, நெல்லை, கோவை, புதுச்சேரி, காரைக் கால் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் சிறைசெல்லும் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் எதிரில் தனி மேடை அமைக்கப்பட்டு போராட்டம் நடந்தது. மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் தலைமை தாங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரை
தமிழகத்தில் முஸ்லிம்களின் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த மாநில அரசை வலியுறுத்தியும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரைப்படி மத்தியிலும் அனைத்து மாநிலங்களிலும் 10 சதவிகிதம் தனி இடஒதுக்கீட்டை சட்டமாக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகத்தின் 4 மையங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஒரே இடத்தில் நடத்தினால் நகரமும் கொள்ளாது, அனைவரையும் கைது செய்து சிறைக்கு அழைத்து செல்ல போலீசாரிடமும் அவ்வளவு வாகனங்களும் இல்லை. இதனால் 4 இடங்களில் பிரித்து நடத்தப்படுகிறது.
ஏமாற தயாராக இல்லை
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு காசு கொடுத்தும், சாராய பாக்கெட்டுகள் கொடுத்தும் கூட்டிவரவில்லை. இடஒதுக்கீட்டை பெறுவதை குறிக்கோளாக கொண்டு அனைவரும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டுள்ளனர். பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு பெற்று தரும் கட்சிக்கு எங்கள் ஆதரவை அளிக்க முடிவு செய்துள்ளோம். இனியும் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறுவதற்கு சமுதாயம் தயாராக இல்லை.
கடந்த சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க, மற்றும் தி.மு.க, தேர்தல் வாக்குறுதிகளில், ‘‘முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு போதுமானதாக இல்லை, என்பதால் வெற்றி பெற்றால், அதிகரித்து வழங்கபடும்’’ என்று இரண்டு கட்சிகளுமே ஒப்புக்கொண்டு அறிவித்தன. ஆனால் ஆட்சியில் அமர்ந்ததும் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
மிகப்பெரிய அதிசயம்
முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு பெற்று தந்த கட்சி தி.மு.க. தான். இதற்காக கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு ஆதரவு
அளித்தோம், அவர்களும் மத்தியில் மந்திரிகளானார்கள். ஆனால் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி இடஒதுக்கீடு சதவிகிதம் மட்டும் அதிகரிக்கப்படவில்லை.
அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு இல்லாவிட்டாலும், வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக முஸ்லிம்களுக்கு மத்தியில் இடஒதுக்கீட்டு சதவிதித்தை அதிகரித்து வழங்க உரிய நடவடிக்கை எடுத்தால், நாங்கள் அளிக்கும் ஆதரவு மூலம் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அதிசயத்தை சந்திக்கும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள்
வரும் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக இடஒதுக்கீட்டை அ.தி.மு.க, பெற்றுத்தந்தால் பாராளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். தவறினால் பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கும் கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுப்போம். இடஒதுக்கீட்டை பெற்று தந்து எங்கள் வாக்குகளை பெறுங்கள், இல்லையென்றால் எங்கள் எதிர்ப்பை சமாளிக்க தயாராகுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக