கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

திங்கள், 4 ஏப்ரல், 2011

பிறரிடம் யாசிக்காமல் தன்மானத்துடன் வாழ்வோம்

நம்மில் சிலர் எதற்கெடுத்தாலும் மற்றவரிடம் உதவி கேட்பதும்,ஒரு தேவை என்றால் மாற்று வழியை யோசிக்காமல் உடனடியாக அடுத்தவரிடம் யாசிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.இப்படிப்பட்டவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.

முகீரா இப்னு ஷுஅபா(ரலி)யின் எழுத்தர் (வர்ராது) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட ஒன்றை எனக்கு எழுதுங்கள்" என முஆவியா(ரலி) முகீரா(ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு முகீரா(ரலி) 'நிச்சயமாக அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான்; இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார் (என ஆதாரமின்றிப் பேசுவது). பொருள்களை வீணாக்குவதும் அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதும்!" என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன் என பதில் எழுதினார்.

புஹாரி 1477

யாசிக்காதவர்களின் சிறப்பு:
தங்கள் மீது மற்றவர்களுக்கு அனுதாபம் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அந்த அனுதாபத்தை வைத்து நிறைய யாசிக்கலாம் என்பதற்காகவே தங்களுடைய உடைகளை கிழித்துக் கொண்டும் தங்களையே வருத்திக் கொண்டும் அலங்கோலமான நிலையில் இருப்பவர்களை நீங்கள் பார்க்கலாம்.

இவர்களை போன்றவர்கள் ஒரு புறம் இருக்க,மறுபுறம் தான் ஏழை என்பதை மறைத்து தன் மீது எவரும் அனுதாபம் கொள்ளக் கூடாது என்பதற்காகவும் தன் சுய மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் வெளியில் பார்ப்பவர்களுக்கு தான் ஏழை என்று காட்டிக் கொள்ளாமலும் யாரிடமும் யாசிக்காமலும் அல்லாஹ்விடம் மட்டும் பிரார்த்து உதவி கேட்பவர்களை அல்லாஹ் சிறப்பித்துக் கூறுகிறான்.இவர்களையே தேர்ந்தெடுத்து நாம் உதவி செய்ய வேண்டும் என்பதாகவும் அல்லாஹ் தன் திருமறையிலே குறிப்பிடுகிறான்.


(பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்;. அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (அல்குரான் 2:273)

இதுமட்டுமல்லாமல் யாசிக்காதவர்களுக்கு சுவர்க்கம் புகுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மக்களிடம் எதனையும் -யாசகம்- கேட்கமாட்டேன் என எனக்கு உத்திரவாதம் தருபவர் யார்? அவருக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பாளர் : ஸவ்பான்(ரலி)
அபூதாவூத் 1400

யாசிப்பதால் இம்மையிலும் மரியாதை இல்லை மறுமருமையிலும் மரியாதை இல்லை

மேல் கூறப்பட்ட அற்புதமான இறை வசனம் மக்களிடம் யாசிப்பதை தடுத்து தன்மானத்துடன் வாழ அழைக்கின்றது. நாமோ இறை வசனத்தை புறக்கணித்துவிட்டு ஒரு தேவை என்றால் உடனேயே அடுத்தவர் வீட்டு கதவை உதவிக்காக தட்டுகிறோம் ! இன்னும் சிலர் அடுத்தவரிடம் உதவி கேட்டே வாழ்ந்து வருகிறார்கள் இவர்களுக்கு இம்மையிலும் மரியாதை இல்லை மறுமையிலும் அல்லாஹ்விடத்தில் மரியாதை இல்லை.பொதுவாக தவறு செய்பவர்கள் உலகத்தில் சிறப்பாகவும் அந்தஸ்துடனும் வாழ்வதற்கே மறுமையை மறந்து இஸ்லாத்தை கடைப் பிடிக்காமல் வாழ்வார்கள்.ஆனால் உலகத்திலும் இழிவை சந்தித்து மறுமையிலும் இழிவடயக் கூடியவர்கள் யாசிப்பவர்களை தவிர வேறில்லை என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

நபி ஸல் கூறினார்கள்

உங்களில் யாசிப்பதையே வழக்கமாக கொண்டவர், தமது முகத்தில் சதை துண்டு ஏதும் இல்லாதவராகவே (மறுமைநாளில்)அல்லாஹ்வை சந்திப்பார்.இதை அப்துல்லாஹ் பின் உமர்( ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(நூல் முஸ்லிம் 1881,புஹாரி 1474 & 1475)

மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அதிகம் பொருள் சேர்ப்பதற்காக மக்களிடம் யாசிப்பவன், (நரகின்) நெருப்பு கங்கையே யாசிக்கிறான் ; அவன் குறைவாக யாசிக்கட்டும் அல்லது அதிகமாக யாசிக்கட்டும்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் முஸ்லிம் 1883

அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை

இவர்களுக்கு மாபெரும் கருணையாளனாகிய அல்லாஹ்விடம் நம்பிக்கை இல்லை நமக்கெல்லாம் உயிர் கொடுத்து ஞானத்தை கொடுத்து கண்ணியப்படுத்தி இருக்கும் மாபெரும் கருணையாளனாகிய அல்லாஹ்விடத்தில் கேட்க இவர்களுக்கு மனம் இல்லை. தன் மானத்தை அற்ப காசுக்காக விற்று விட்டு எதை பெற்று நீங்கள் திருப்தி அடைந்தீர்கள்? யோசித்து பார்த்தால் வாழ்கையில் எண்ணிலடங்கா முறை உதவிகள் பெற்றிருக்கிறோம் என்றாவது போதும் ஏற்கனவே கொடுத்தது இருக்கிறது என்று எண்ணி இருப்போமா ?

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஆதமின் மகனுக்கு( மனிதனுக்கு) தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தாலும், அதைப்போன்று மற்றொரு நீரோடையும் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுவான் .அவனது வாயை (சவக் குழியின்) மண்ணை தவிர வேறெதுவும் நிரப்பாது.(இது போன்ற பேராசயிலிருந்து) திருந்தி பாவ மன்னிப்பு கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் .

அறிவிப்பாளர் அனஸ்(ரலி) நூல் முஸ்லிம் 1895

நாம் பிறரிடம் யாசிக்காமல் தன்மானத்துடன் வாழ்ந்தால் நாம் யாசிக்கும் செல்வத்தை விட அல்லாஹ் நமக்கு அதிகமாக கொடுப்பான் என்ற எண்ணம அனைத்து முஃமீனிடத்திலும் வர வேண்டும்.யார் பிறரிடம் யாசிக்காமல் பொறுமையுடன் இருக்கிறானோ அவனுக்கு அல்ல்லாஹ் பொறுப்பாளியாக இருப்பதாக நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

அன்சாரிகளில் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் யாசித்தார்கள். நபி(ஸல்) அவர்களும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் நபியவர்களிடம் அவர்கள் யாசித்தார்கள் அப்போதும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். பிறகும் அவர்கள் கேட்க, நபி(ஸல்) அவர்கள் மீண்டும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்களிடம் இருந்தது அனைத்தும் தீர்ந்து போன பின் 'என்னிடமுள்ள செல்வதை நான் உங்களுக்குத் தராமல் பதுக்கி வைக்கவே மாட்டேன். ஆயினும் யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான்; யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான்; மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமான அருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை" என்றார்கள்.

புஹாரி 1469

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு அல்லாஹ் வழங்கியதை போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்கையில்) வெற்றி பெற்றுவிட்டார்

அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அமர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல் முஸ்லிம் 1903

சுயமரியாதையை பேணுவோம்

மற்ற எந்த மதங்களிலும் குறிப்பிடாத அளவிற்கு .இஸ்லாம் மனிதனின் சுய மரியாதையை பெணுதலில் அதிகம் கவனம் செலுத்துகிறது.மனிதன் தன்மானத்துடன் வாழவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது , ஏனெனில் மக்களிடம் யாசிப்பது வெறுக்கப்பட்ட செயல்லாகும். யாசிப்பவனின் கரம் தாழ்ந்தது கொடுப்பவரின் கரம்தான் உயர்ந்தது என்பதையே இஸ்லாம் நமக்கு போதிக்கிறது .

அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) கூறியதாவது. நபி(ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, 'உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது" என்றும் கூறினார்கள்.

புஹாரி 1429

யாசகம் கேட்டு வருபவரை பார்த்தல் நன்கு ஆரோக்யத்துடன் தான் இருப்பார்கள் ஆனால் உழைத்து பொருள் திரட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக இது சிறந்ததாக இருக்காது.இஸ்லாத்தின் பார்வையில் யாசகத்தை விட ஒருவனுடைய உழைப்பினால் கிடைக்கும் அற்பமான சம்பாத்தியமே சிறந்தது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது உயிர் யாருடைய கைவசமிருக்கிறதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவர் தம் கயிற்றை எடுத்துக் கொண்டு விறகு வெட்டி அதைத் தம் முதுகில் சுமந்து சம்பாதிப்பது, ஒருவனிடம் வந்து யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவன் யாசிப்பவருக்கு கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்."

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
புஹாரி 470

யார் யாசிக்கலாம்

மேற்கூறிய ஆதாரங்களை வைத்து யாருமே யாசகம் கேட்கக் கூடாது என்று முடிவெடுத்து விடக் கூடாது.நபி(ஸல்) அவர்கள் விதிவிலக்காக மூன்று சாராரை யாசிக்க அனுமதிதுள்ளார்கள்.
மற்றவருடைய கடனுக்கு பொறுப்பேற்றுக் கொண்டவர் யாசிக்கலம். அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்றவரை யாசிக்கலாம்.
சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர் 'வாழ்கையின் அடிப்படையை' அல்லது 'வாழ்க்கையின் அவசியத் தேவையை' அடைந்து கொள்ளும் வரை யாசிக்கலாம்.
விவரம் தெரிந்த மூவர் முன் வந்து, "இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்" என்று (சாட்சியம் ) கூறுகின்றனர் என்றால், அவர் 'வாழ்கையின் அடிப்படையை' அல்லது 'வாழ்கையின் அவசியத் தேவையை' அடைகின்ற வரை யாசிப்பது அவருக்குச் செல்லும்
1
யார் யாசிக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள்

கபீசா !மூன்று பேருக்கு மட்டுமே யாசிக்க அனுமதி உண்டு. ஒருவர் மற்றவரது ஈட்டுத் தொகைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டவர் அவர் அத்தொகையை (உரியவரிடம் ஒப்படைப்பதற்காக அதைப்) பெறுகின்றவரை யாசிக்கலாம். பிறகு (யாசிப்பதை) நிறுத்திக்கொள்ள வேண்டும். மற்றொருவர் (இயற்கைச்) சேதம் ஏற்பட்டு செல்வங்களை இழந்தவர். அவர் 'வாழ்கையின் அடிப்படையை' அல்லது 'வாழ்க்கையின் அவசியத் தேவையை' அடைந்து கொள்ளும் வரை யாசிக்கலாம். இன்னொருவர் வறுமைக்கு ஆட்பட்டவர். அவருடைய கூட்டத்தாரில் (அவரைப் பற்றி) விவரம் தெரிந்த மூவர் முன் வந்து, "இன்ன மனிதர் வறுமைக்கு ஆட்பட்டுள்ளார்" என்று (சாட்சியம் ) கூறுகின்றனர் என்றால், அவர் 'வாழ்கையின் அடிப்படையை' அல்லது 'வாழ்கையின் அவசியத் தேவையை' அடைகின்ற வரை யாசிப்பது அவருக்குச் செல்லும், கபீசா!இவையன்றி மற்றைய யாசகங்கள் யாவும் தடை செய்யப் பட்டவையே (ஹராம்) ஆகும். (மூன்று காரணங்களின்றி ஒருவர் யாசித்துச் சாப்பிட்டால்) அவர் தடை செயப்பட்டதையே (ஹராம்) சாப்பிடுகிறார்.

அறிவிப்பாளர் : கபீசா பின் முகாரிக் அல்ஹிலாலி (ரலி) நூல் முஸ்லிம் 1887

இந்த மூன்று சாராரை தவிர வேறு யாரும் யாசிக்க அனுமதி இல்லை.யார் இந்த மூன்று சாராரில் இல்லையோ அல்லது அந்த நிலையிலிருந்து மீண்டு விட்டாரோ அவர்கள் மறுமை நாளை அஞ்சி யாசகம் கேட்காமல் சுய மரியாதையோடு வாழ முயற்சிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் முஸ்லிம் 1898

Thanks:MOHAMED RAFEEK (Saudi Arabia)FRTJ WEBMASTER

0 கருத்துகள்:

கருத்துரையிடுக