எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தவன். நானே மகத்தான இறைவன் என்று பிரகடனப்படுத்தியவன்.
இவன் தனது நாட்டின் மக்களை உயர்ந்தவர்,தாழ்ந்தவர் எனப் பிரித்து ஆட்சி செய்தான்.அவனது ஆட்சியில் கொத்தடிமைகளாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டவர்கள் இஸ்ரவேல் சமுதாயத்தினர். இந்த அக்கிரமக்கார அரசனிடம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் நபி மூஸா(அலை) அவர்கள்.ஃபிர்அவ்னிடத்தில் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ததோடு ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் சமுதாயத்துக்காக உரிமைக் குரல் கொடுத்து அம்மக்களை அடிமைத் தளையிலிருந்து மீட்கும் மாபெரும் பொறுப்பு நபி மூஸா(அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில் அந்த வரலாற்றை எடுத்துக் கூறுகின்றான். திருக்குர்ஆன் கூறும் அந்த வரலாற்றை இப்போது பார்ப்போம்.
ஃபிர்அவ்னின் சர்வாதிகார ஆட்சி
மூஸா மற்றும் ஃபிர்அவ்ன் பற்றிய உண்மையான செய்தியை நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்காக உமக்குக் கூறுகிறோம். ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில் உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான். (அல்குர்ஆன்: 28:3,4)
மூஸா நபியின் பிறப்பு
பனூ இஸ்ரவேலர்களை ஃபிர்அவ்ன் இவ்வாறு கொடுமைப் படுத்திக் கொண்டிருந்த போது, நபி மூஸா(அலை) அவர்கள் பிறக்கின்றார்கள். நபி மூஸா(அலை) அவர்கள் பிறந்த காலகட்டத்தில் ஃபிர்அவ்ன் அந்தச் சமுதாயத்தின் ஆண் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தான்.
நபி மூஸா(அலை) அவர்கள் பிறந்தவுடன் ஃபிர்அவ்ன் அவரைக் கொன்று விடுவான் என்று எண்ணி அஞ்சிக் கொண்டிருந்த நபி மூஸா(அலை) அவர்களின் தாயாருக்கு அல்லாஹ் ஒரு செய்தியை உள்ளுணர்வாக அறிவித்துக் கொடுத்தான். அதன் அடிப்படையில் அவர்கள் மூஸா நபியவர்களை ஒரு பெட்டியில் வைத்து, கடலில் போட்டு அனுப்பி விடுகின்றார்கள். அதன் பின் அந்தக் குழந்தை (மூஸா நபி) ஃபிர்அவ்னிடமே வந்து சேர்கின்றது.இந்த வரலாற்றை வல்ல அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்..
தன் பகையை தானே வளர்த்த ஃபிர்அவ்ன் அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக! இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும், இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான் (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம் மீது என் அன்பையும் செலுத்தினேன். உமது சகோதரி நடந்து சென்று இக்குழந்தையை பொறுப்பேற்பவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார். எனவே உமது தாயின் கண் குளிர்வதற்காகவும் அவர் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் அவரிடம் உம்மைத் திரும்பச் சேர்த்தோம். நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர். உம்மைக் கவலையிலிருந்து காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம். மத்யன்வாசிகளிடம் பல வருடங்கள் வசித்தீர்.மூசாவே பின்னர் (நமது) திட்டப்படி வந்து சேர்ந்தீர். (அல்குர்ஆன் 20:38-40)
நபித்துவம் வழங்கப்படுதல்
மூஸா அந்தக் காலக்கெடுவை முடித்து, தமது குடும்பத்தாருடன் இரவில் பயணம் மேற்கொண்ட போது தூர் மலையின் திசையில் ஒரு நெருப்பைக் கண்டார். இருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன்.அது பற்றிய செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக அதில் பந்தத்தையோ கொண்டு வருகிறேன் என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார். அவர் அங்கே வந்த போது பாக்கியம் பெற்ற இடத்தில், வலப்புறத்தில் இருக்கும் ஓடையில் உள்ள மரத்திலிருந்து மூஸாவே! நான் தான் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் என்று அழைக்கப்பட்டார்.(அல்குர்ஆன்:; 28:29-30)
இரு பெரும் அற்புதங்கள்
உமது கைத்தடியைப் போடுவீராக! (என்றான்) அதைச் சீறும்பாம்பாகக் கண்ட போது திரும்பிப் பார்க்காது பின்வாங்கி ஓடினார்.மூஸாவே! முன்னே வாரும்! அஞ்சாதீர்! நீர் அச்சமற்றவராவீர்.உமது கையை உமது சட்டைப் பைக்குள் நுழைப்பீராக! எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக அது வெளிப்படும். பயத்தின் போது உமது விலாப்புறத்தை ஒடுக்கிக் கொள்வீராக!